இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 வழங்கப்படும்: பிரதமர் மோடி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்​கு​ வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்​களுக்கு ஆண்​டு​தோறும் ரூ.36,000 வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

ஏப்.23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக மேற்கு வங்க சட்டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. தேர்​தலை​யொட்டி மேற்​கு ​வங்​கத்​தின் விஷ்ணுபூர், புருலி​யா, ஜார்​கி​ராம், மிதி​னாபூர் உள்​ளிட்ட பகு​தி​களில் பாஜக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று தீவிர பிரச்சாரம் செய்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்​யும் மசோ​தாவை திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தோற்​கடித்​து​விட்​டன. பெண்​களுக்கு துரோகம் இழைத்த திரிண​மூல் கட்சிக்கு வரும் தேர்​தலில் பெண்கள் தகுந்த பாடம் கற்​பிப்​பார்​கள். மேற்​கு ​வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்களுக்கு ரூ.5 லட்​சம் வரை மருத்துவ காப்​பீடு வழங்​கப்​படும்.

பெண்​களின் குடும்​பத்​தில் யாருக்​காவது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் அவர்​களுக்கு அரசு மருத்​து​வ​மனை​களில் இலவச​மாக டயாலசிஸ் சிகிச்சை அளிக்​கப்​படும். மேற்​கு ​வங்க பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்​கப்​படும். இதன்​படி ஆண்​டு​தோறும் பெண்​களுக்கு ரூ.36,000 வழங்​கப்​படும். மத்​திய அரசு சார்​பில் பெண்​களின் குழந்​தைப்​பேறுக்கு ரூ.21,000 அளிக்கப்​படும்.

பெண் குழந்​தைகளின் கல்விக்கு ரூ.50,000 வழங்​கப்​படும். பாஜக ஆட்சி அமைக்​கும்​போது மத்​திய அரசின் அனைத்து திட்​டங்​களும் அமல்​படுத்​தப்​படும். கடந்த 15 ஆண்​டு​களாக திரிண​மூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வரு​கிறது. ஆனால் மக்​களுக்கு எந்த பயனும் இல்​லை. கல்​வி, சுகா​தா​ரம், வேளாண்மை உள்​ளிட்ட துறை​களில் மாநிலம் மிக​வும் பின்​ தங்​கிய நிலை​யில் உள்​ளது. அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி உள்ளது.

வேலை​ வாய்ப்​பின்மை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. சட்​டம், ஒழுங்கு பாதிக்​கப்​பட்டு மாநிலம் முழு​வதும் வன்​முறை சம்பவங்கள் அரங்​கேறி வரு​கின்​றன. மத்​தி​யில் ஆளும் பாஜக அரசே, வங்​க மொழிக்கு செம் ​மொழி அந்​தஸ்தை வழங்​கியது. மேற்​கு​ வங்க விவ​சா​யிகளுக்கு திரிண​மூல் அரசு துரோகம் இழைத்து வரு​கிறது.

நீர்ப்​பாசன திட்​டங்​கள் மிக நீண்ட கால​மாக கிடப்​பில் போடப்​பட்டு உள்​ளன. வயல்​கள் வறண்​டு, விவ​சா​யிகள் கண்​ணீரில் தத்​தளித்து வரு​கின்​றனர். பாஜக ஆட்சி அமைத்​தால் நீர்ப்​பாசன திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும்.

விவ​சா​யிகளின் வாழ்க்​கை​யில் மிகப்​பெரிய மாற்​றத்தை ஏற்படுத்​து​வோம். மேற்கு வங்க ஆசிரியர் தேர்​வில் மிகப்​பெரிய மோசடிகள் நடை​பெற்று உள்​ளன. இதனால் ஆயிரக்​கணக்​கான இளைஞர்​களின் கனவு கலைந்​தது.

பாஜக ஆட்சி அமைத்​தால் நேர்மை​யான முறை​யில் அரசு பணிக்கு ஆட்​தேர்வு செய்​யப்​படும். எனது அனுபவத்​தின் அடிப்​படை​யில் மேற்​கு ​வங்​கத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படு​வது உறு​தி. இவ்​வாறு பிரதமர் பேசி​னார்.

செய்​தி​யாளர்​களுக்கு நிதி:

மேற்​கு ​வங்க பாஜக தலை​வர் சமிக் பட்​டாச்​சார்யா கொல்​கத்​தா​வில் கூறும்​போது, “மக்​களுக்​காக​வும் ஜனநாயகத்தை காப்​பாற்​ற​வும் செய்​தி​யாளர்​கள் தன்​னலம் இன்றி பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களின் நலனில் பாஜக மிகுந்த அக்​கறை கொண்​டிருக்​கிறது. மேற்​கு​ வங்​கத்​தில் நாங்​கள் ஆட்சி அமைத்​தால் அனைத்து செய்​தி​யாளர்​களுக்​கும் அரசு சார்பில் மாதந்​தோறும் ரூ.5,000 உதவித்​ தொகை வழங்​கப்​படும்​. பத்திரி​கை சுதந்​திரம்​ பாது​காக்​கப்​படும்" என்​று தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT