புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த நியமன எம்.பி. சதானந்தன் மாஸ்டர். கேரள பாஜக துணைத் தலைவராக இருக்கும் இவர், கேரளாவில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கண்ணூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிரமாக செயலாற்றிய இவரை, மார்க்சிஸ்ட் கட்சியினர் 1994-ம் ஆண்டு கடுமையாக தாக்கியதில் 2 கால்களையும் இழந்து செயற்கைக் கால்களைப் பொருத்தியுள்ளார்.
இவர் கடந்த வாரம் மாநிலங்களவையில் முதல் முறையாக பேசினார். அப்போது தனது செயற்கைக் கால்களைக் கழற்றி மேசையின் மீது வைத்து ஜனநாயகம் குறித்து பேசினார். இதுகுறித்து அவருக்கு கடந்த 6-ம் தேதி எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
உங்கள் தைரியத்தை கேரளா நன்கறியும். பிற்போக்குக் கொள்கை உடையவர்கள் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்டோர் நாட்டில் பலர் உள்ளனர். நீங்கள் அமைதியான முறையில் உங்கள் கருத்துக்களை முன்வைத்ததைப் பாராட்டுகிறேன். நீங்கள் நாடு தான் முதலில் என்ற உறுதி மற்றும் கொள்கையை கொண்டு வந்துள்ளீர்கள். செயற்கைக் கால்களை நீங்கள் மேசையில் கழற்றி வைத்து பேசியதை பார்த்து, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாட்டு மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உங்களது பேச்சையும் சில எம்.பி.க்கள் கேலி செய்தனர். தற்போது பிற்போக்கு கொள்கைகள் வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. திருவனந்தபுரத்துக்கு நான் சமீபத்தில் வந்த போது கேரள மக்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் செயல்பாடுகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளதை காட்டுகிறது.
அவர்கள் வளர்ச்சியடைந்த கேரளம் என்ற நமது தொலைநோக்கு பார்வையைப் பாராட்டுகின்றனர். மத்திய பட்ஜெட், கேரளாவுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும் என்பதால், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.