புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கனடா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை தனியாக சந்தித்துப் பேசினார்.
ஜி20 உச்சி மாநாடு தென்னாப் பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து பேசினார். இதையடுத்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: கனடா பிரதமர் கார்னியுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வரும் மாதங்களில் குறிப்பாக, வர்த்தகம், முதலீடு. தொழில்நுட்பம், எரிசக்தி, புத்தாக்கம், கல்வி ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டோம். இதன் காரணமாக, வரும் 2030-க்குள் 50 பில்லியன் டாலர் (ரூ.4.46 லட்சம் கோடி) வர்த்தக இலக்கை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
கனடாவைச் சேர்ந்த ஓய்வூதிய நிதியங்களும் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதில் மிக ஆர்வமாக உள்ளன. எதிர்காலத்தில் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் ஆழமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் சம்மதம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜி20 மாநாட்டில் ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சியையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, புத்தாக்கம், பாதுகாப்பு, டேலண்ட் மொபிலிட்டி உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். வலுவான கூட்டாண்மை மூலம் இந்தியா-ஜப்பான் இடையேயான வர்த்தகத்தை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என்று இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஜி20 மாநாட்டின் இடையே இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனியையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டெல்லியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மெலோனி கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் எப்போதும் உறுதியாக நிற்போம் என்று மெலோனி தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் நேர்மறையான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக இந்த சந்திப்பின்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது. 2025-29 கூட்டு வியூக செயல் திட்டத்தின் முன்னேற்றத்தில் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். எதிர்காலத்தில் உலகளாவிய பல தளங்களில் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.