

மும்பை: இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் நேற்று இணைக்கப்பட்டது.
இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக ஐஎன்எஸ் மாஹே என்ற போர்க்கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் 23-ம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பேசும்போது, ”மாஹே போர்க் கப்பலின் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வாழ்த்துகள். கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் கடற்படையில் இணைக்கப்படுவதை பார்வையிடுவது பெருமையாக உள்ளது. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் போர்க் கப்பல்கள் உருவாக்கும் நமது திறன் மேம்பட்டுள்ளதை இந்நிகழ்வு காட்டுகிறது” என்றார்.
இந்தப் போர்க்கப்பலில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. 78 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் 60 வீரர்கள் பயணிக்க முடியும். இது 25 நாட் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. இதில் சோனார், கண்காணிப்பு ரேடார், டா்ர்பிடோ ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ராக்கெட்டுகள் உள்ளன. ஆழம் குறைவான பகுதிகளில் செல்லும் இந்த கப்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இது போர்க்காலங்களில் கடலில் கண்ணி வெடிகளை அமைக்கும் பணியிலும் ஈடுபடும். கடலோர ரோந்து பணிக்கும் பயன்படுத்தப்படும்.
மலபார் கடற்கடையில் உள்ள மாஹே என்ற நகரின் பெயர் இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இன்னும் 7 மாஹே ரக கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்படும். இவை கடற்படையில் உள்ள பழமையான அபே ரக போர்க் கப்பல்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும். மாஹே ரக போர்க்கப்பல்கள் கடற்படையின் கண்காணிப்பை மேம்படுத்தும்.