இந்தியா

என்டிஏ எம்.பி.க்களுக்கு டிச.11-ல் சிறப்பு இரவு விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி!

மோகன் கணபதி

புதுடெல்லி: ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், நாடாளுமன்ற அவை வியூகத்தை நெறிப்படுத்தவும் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்து அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பேசிய பாஜக மூத்த தலைவர் ஒருவர், "கூட்டணி கட்சிகளிடையே வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்ட முன்னுரிமைகள், இந்த கூட்டத் தொடருக்கான அரசாங்கத்தின் பரந்த நிகழ்ச்சி நிரல்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைந்த எதிர்கால திட்டங்கள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவார்.

கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் மூத்த அமைச்சர்கள், கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர்கள், எம்பிக்கள் இந்த உரையாடலில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கான உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். தேர்தல்களுக்கு முன்னதாக கூட்டணி கட்சிகள் தங்கள் அணுகுமுறைகளை மேம்படுத்திக் கொள்ளும்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அங்கு கட்சி (பாஜக) தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 20-ம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்கம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடியா மாவட்டத்தில் ஒரு முக்கிய பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில், மேற்கு வங்கம் முழுவதும் நான்கு முதல் ஆறு யாத்திரைகளை நடத்த கட்சி தயாராகி வருகிறது. இது குறித்தும் பிரதமர் மோடி என்டிஏ கூட்டத்தில் உரையாற்றுவார்.

சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நடத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் மதிப்பீடு செய்யப்படும்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT