பிரதமர் மோடி வந்த சி-130ஜே ராணுவ விமானம், திப்ரூகர் நெடுஞ்சாலையில் தரையிறங்குகிறது. (அடுத்த படம்) விமானத்தில் இருந்து வெளியே வரும் பிரதமர்.
திப்ரூகர்: அவசர காலத்தில் எளிதாக தரையிறங்கும் விதமாக அசாமில் உள்ள நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக ஓடுபாதையில், பிரதமர் மோடி நேற்று ராணுவவிமானத்தில் சென்று தரையிறங்கினார். அவசரகால பயன்பாட்டுக்காக ஓடுதளத்தை தொடங்கி வைத்து, ரூ.5,450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
அவசர காலங்களில் விமானப்படை விமானங்களை உடனடியாக தரையிறக்கி, மீட்பு பணிகளை எளிதில் மேற்கொள்ளும் நோக்கில், அசாம் மாநிலம் திப்ரூகர் நகரின் மொரன் நெடுஞ்சாலையில் 4.2 கி.மீ. தூரத்துக்கு அவசரகால விமான ஓடுதளம் (இஎல்எப்) ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று அசாமுக்கு வந்தார்.
சாபுவா விமானப்படை தளத்துக்கு வந்த பிரதமரை அசாம் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜே ரக போக்குவரத்து விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார். திப்ரூகரின் மொரன் நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவசரகால விமான ஓடுதளத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.
இதையடுத்து, அவசரகால பயன்பாட்டுக்காக ஓடுதளத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, 40 நிமிடங்கள் நடைபெற்ற போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியையும் பார்வையிட்டார். சுகோய், ரஃபேல், தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் மொரன் நெடுஞ்சாலையில் தரையிறங்கி, புறப்பட்டுச் சென்றன.
சீனாவுக்குப் போட்டியாக.. சீனா தனது எல்லைப் பகுதியில் 7 விமானப்படை தளங்களை அமைத்துள்ளது. இதற்கு போட்டியாக இந்தியாவும் எல்லை அருகே ஹசிமரா, தேஜ்பூர், ஜோர்ஹாட், சாபுவா ஆகியபகுதிகளில் விமானப்படை தளங்களை அமைத்துள்ளது. போர் சூழலில், பெரும்பாலும் விமானப்படைத் தளங்கள் குறிவைத்து தாக்கப்படும். இதை கருத்தில் கொண்டு, அசாமில் உள்ள நெடுஞ்சாலையில் அவசரகால விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: அவசரகால பயன்பாட்டுக்காக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான ஓடுதளம் மிக முக்கியமானது. மொரன் பைபாஸ் சாலையில் 4.2 கி.மீ தூரத்துக்கு ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓடுதளம், விமானப்படை பயன்பாடு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும். திப்ரூகர் விமான நிலையத்தில் அவசரநிலை ஏற்பட்டாலும், இந்த ஓடுதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
74 டன் விமானங்கள்: இதில் 40 டன் எடையுள்ள போர்விமானம், மற்றும் 74 டன் எடையுள்ள போக்குவரத்து விமானங்கள் தரையிறங்கி, புறப்பட்டுச் செல்ல முடியும். நாட்டின் முதல் அவசரகால விமான ஓடுதளம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
பின்னர், சி-130ஜே விமானத்தில் பிரதமர் மோடி குவாஹாட்டி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். குவாஹாட்டி - வடக்கு குவாஹாட்டியை இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே ரூ.3,030 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘குமார பாஸ்கரவர்மா’ பாலத்தையும் பார்வையிட்டார். இது நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதால், அதிர்வுகளைத் தாங்கும் தொழில் நுட்பத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் வர்த்தகத்தை ஊக்குவிக்கும். காமாக்யா கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பயணத்தையும் எளிதாக்கும்.
குவாஹாட்டியின் லசிட் காட்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5,450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கம்ருப் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தரவு மையம், குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை மையத்தின் தற்காலிக மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பிஎம்-இ-பேருந்து சேவா திட்டத்தின்கீழ்225 மின்சார பேருந்துகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர், கானாபாராவில் நடந்தபாஜக கூட்டத்தில் உரையாற்றினார்.