புதுடெல்லி: டெல்லியில் நாளை (ஜன.12) நடைபெறும் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாட உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 'விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல் 2026' நிகழ்ச்சி டெல்லி பாரத் மண்டபத்தில் ஜனவரி 9-ம் தேதி தொடங்கியது.
இதன் இறுதி அமர்வு ஜனவரி 12-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் கலந்துரையாட உள்ளார். விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026- பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் பிரதமரிடம் 10 கருப்பொருள் பிரிவுகளில் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தங்கள் கண்ணோட்டங்கள் மற்றும் செயல்படுத்தக்கூடிய யோசனைகளை பகிர்ந்துகொள்வார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நீண்டகால இலக்குகள் குறித்து இளம் பங்கேற்பாளர்களால் எழுதப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை கொண்ட ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026-க்கான கட்டுரைத் தொகுப்பை’ பிரதமர் வெளியிடுவார்.
‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ என்பது இந்தியாவின் இளைஞர்களுக்கும் தேசிய தலைமைக்கும் இடையிலான ஒரு கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடலை எளி தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய தளமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.