புதுடெல்லி: நொய்டா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இது 2 நிமிடத்துக்கு ஒரு விமானம் புறப்படும் திறன் வாய்ந்தது என பெருமிதமாத தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜேவாரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
புதிதாக திறக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம், வட இந்தியா முழுவதையும் உலக நாடுகளுடன் இணைக்கும் முக்கிய மையமாக அமையும். இங்கிருந்து ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு விமானம் இயக்கப்படும் வகையில் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் நொய்டா, சுயலாபத்துக்காக ஒரு ‘ஏடிஎம்' இயந்திரமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் நொய்டா, மாநிலத்தின் வளர்ச்சி இன்ஜினாக மாறியுள்ளது.
செமிகண்டக்டர் தொழிற்சாலை, மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில்கள் என உத்தர பிரதேசம் நவீன வசதிகளுடன் முன்னேறி வருவது ‘இரட்டை இன்ஜின்' அரசின் முயற்சிக்குச் சான்றாகும்.
விவசாயிகள், சிறு, குறு தொழில்கள், மேற்கு உத்தர பிரதேசத்தின் இளைஞர்களுக்கு இந்த விமான நிலையம் ஏராளமான புதிய வாய்ப்புகளை வழங்கும்.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் சூழல் நிலவும் நிலையிலும், இந்தியா தனது வளர்ச்சிப் பாதையில் தொய்வின்றி முன்னேறி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.