இந்தியா

மக்கள் மனதை ஒன்றிணைக்கும் தமிழ்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஜி தீவு முதல் காசி வரை மக்களின் மனங்களை ஒன்றிணைக்கிறது தமிழ் மொழி என்று ‘மனதின் குரல்’ வானொலி உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற தலைப்பில் மாதம்தோறும் கடைசி வாரம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 129-வது மற்றும் இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றியதாவது: சில நாட்களில் 2026-ம் ஆண்டு தொடங்குகிறது. ஆபரேஷன் சிந்தூர், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா, சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்றது, பிரயாக்ராஜ் மகா கும்பமேளா, அயோத்தி ராமர் கோயில் கொடியேற்றம் மற்றும் விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது, மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது. பார்வை மாற்றுத் திறன் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றது என கடந்த ஓராண்டில் நிகழ்ந்த அனைத்து சாதனைகளும் என் மனதில் நிழலாடுகின்றன.

ஜனவரி 12-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு ‘தேசிய இளைஞர் தினம்’ கொண்டாடப்படுகிறது. அன்று 2-வது ஆண்டு ‘விக்‌ஷித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல்’ சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க நானும் ஆர்வமாக இருக்கிறேன். அப்போது, புதுமை, உடல்நலம், ஸ்டார்ட்-அப், வேளாண்மை உட்பட எந்த துறை சார்ந்த யோசனைகளையும் இளைஞர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய விநாடி-வினா நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு நடந்தது. இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். கட்டுரைப் போட்டியும் நடந்தது. தமிழகம் முதலிடம் என பாராட்டு இதில் மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இந்த போட்டியில் தமிழகம் முதல் இடமும், உத்தர பிரதேசம் 2-ம் இடமும் பிடித்தன. கடந்த மாதம் பிஜி தீவின் ராக்கீராக்கீ பகுதி பள்ளியில் முதல்முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டது. மேடையில் குழந்தைகள் தங்கள் மொழியின் பெருமை குறித்து தங்கு தடையின்றி உரையாற்றினர். குழந்தைகள் தமிழில் கவிதைகளை படித்தனர். சொற்பொழிவு நிகழ்த்தினர். தங்களது கலாச்சாரத்தை தன்னம்பிக்கையோடு மேடையில் வெளிப்படுத்தினர்.

இந்தியாவிலும் தமிழ் மொழியின் பரவலாக்கம் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. எனது மக்களவைத் தொகுதியான காசியில் காசி தமிழ் சங்கமத்தின் 4-ம் ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. (இவ்வாறு கூறியதும், இந்தியை தாய்மொழியாக கொண்ட காசி குழந்தைகள், தமிழ் மொழியில் சரளமாகப் பேசும் ஒலிநாடாவை பிரதமர் ஒலிக்க செய்தார்.) தமிழ் கற்கலாம் என்ற மையக் கருத்தைஒட்டி, வாராணசியின் 50-க்கும் மேற்பட்டபள்ளிகளில் சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

பிஜி தீவு முதல் காசி வரை மக்களின் மனங்களை ஒன்றிணைக்கிறது தமிழ் மொழி. இது உலகின் மிகவும் பழமையான மொழி. தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது. இன்று நாட்டின் பிற பகுதிகளில்கூட குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுதான் மொழியின் பலம், இதுவே பாரதத்தின் ஒற்றுமை. இப்படி நமது வேர்களோடு இணையும் இந்த முயற்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பங்களிக்கின்றனர். துபாயில் வசிக்கும் கன்னடக் குடும்பத்தினர், கன்னடப் பாடசாலை தொடங்கி உள்ளனர். உண்மையில், கன்னட நாடு, நுடி - நம்ம ஹெம்மே. அதாவது கன்னடபூமியும், மொழியும் நமது பெருமிதம் என்பதே இதன் பொருள்.

ஆந்திர மாநிலம் நர்சாபுரம் மாவட்டத்தின் லேஸ் கிராஃப்ட் பல தலைமுறைகளாக பெண்களின் கைப்பொருளாகவே இருந்து வந்தது. இன்று ஆந்திர அரசு, நபார்டு வங்கி இணைந்து கைவினைஞர்களுக்குப் புதிய வடிவமைப்பைக் கற்பித்து வருகின்றனர். தற்போது நர்சாபுரம் லேஸுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மணிப்பூர் இளைஞர் மோயிராங்க்தேம் சேட், தங்கள் பகுதியில் மின்சார பிரச்சினைக்கு உள்ளூர் அளவில் சூரிய சக்தி மூலம் தீர்வு கண்டுபிடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். சுதந்திரம் பெற்றுத் தந்த வீரர்கள்,வீராங்கனைகள் பலருக்கு, துரதிர்ஷ்டவசமாக உரிய மரியாதை, பெருமை கிடைக்கவில்லை. அந்த வகையில், ஒடிசாவின் பார்வதி கிரியின் பிறந்த நாள் நூற்றாண்டு 2026 ஜனவரியில் கொண்டாடப்படுகிறது. நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களின் மகத்துவம் வாய்ந்த கதைகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

நிமோனியா, சிறுநீரகத் தொற்று போன்றவற்றுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சக்தி குறைந்தவையாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. மக்கள் சற்றும் சிந்திக்காமல் எதிர்ப்புமருந்துகளை எடுத்துக் கொள்வதுதான் இதற்கு முக்கிய காரணம். ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் உடல் உறுதியோடு இருக்க வேண்டும். கண்டிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT