வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம்

உறுதிமொழி படிவத்தை நிரப்ப திணறும் மக்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னை கொரட்டூரில் நேற்று நடைபெற்ற முகாமில் பங்கேற்றவர்கள்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னை கொரட்டூரில் நேற்று நடைபெற்ற முகாமில் பங்கேற்றவர்கள்.

Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விதமாக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையாக கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரியில் இல்லாதவர்கள் என 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, டிச.19-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதியானவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர். நிரந்தரமாக இடம்பெயர்ந்ததாக, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 66.44 லட்சம் பேரும், தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.

அதனால் பொதுமக்கள் வசதிக்காக, விடுமுறை நாட்களான கடந்த 27, 28-ம் தேதிகளில் (சனி,ஞாயிறு) தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அங்கு தேவையான படிவங்கள் அனைத்தும்வழங்கப்பட்டன. இந்த பணிகளை கண்காணிக்க வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிக அளவில்விண்ணப்பங்கள் வரும் நிலையில், ஏற்கெனவே இப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு வேலைச்சுமை ஏற்படுவதை தடுக்க, 234 தொகுதிகளுக்கும் கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நியமித்துள்ளார். அதன்படி, சிறப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏதுவாக,ஜன.25-ம் தேதி வரை கட்டணமின்றி இலவச இருப்பிடச் சான்று பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 26-ம் தேதி இரவு வரை 1.85 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். கடந்த 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், 27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 2.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அன்று வரை மொத்தம் 4.42 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் நீக்கம் தொடர்பாக மொத்தம் 4,741 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு மாவட்டத்தில் பெயரை நீக்கி, மற்றொரு மாவட்டத்தில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க முறையே படிவம்-7, படிவம்- 6ஐ கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சில அதிகாரிகள் படிவம் 8-ஐ வழங்கினாலே போதும் என்கின்றனர். இதனால் விண்ணப்பிக்கச் சென்ற வாக்காளர்கள் அலைக்கழிக்கப்பட்டு அவதிக்கு ஆளாகினர்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) சிலருக்கு சரியான விவரங்கள் தெரியவில்லை. உயர் அதிகாரிகளிடமும் கேட்டுச் சொல்வதில்லை என்று வாக்காளர்கள் புகார் கூறுகின்றனர். நிரந்தரமாக குடிபெயர்ந்ததற்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், இப்போது பெயரை சேர்க்க படிவம்-6 உடன், உறுதிமொழிபடிவம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.

அந்த படிவத்தில், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட எஸ்ஐஆர் படிவம் போலவே, தாய், தந்தை பெயர், வாக்காளர்எண், முந்தைய எஸ்ஐஆர் காலத்தில் வெளியான வாக்காளர் பட்டியல் இடம்பெற்ற விவரம் போன்றவை கேட்கப்படுகின்றன. இந்த விவரங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமுகாம்கள் வரும் ஜன.3, 4-ம்தேதிகளிலும் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த வரும்ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம். பிப்.17-ம் தேதி இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னை கொரட்டூரில் நேற்று நடைபெற்ற முகாமில் பங்கேற்றவர்கள்.</p></div>
பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிப்பு: அதிமுக பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in