புதுடெல்லி: மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கேபினட் செயலாளர் சோமநாதன், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர்கள் பி.கே.மிஸ்ரா, சக்தி காந்த தாஸ் மற்றும் 54 துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது தங்கள் துறையின் வளர்ச்சி சார்ந்த அறிக்கைகளை பிரதமர் மோடியிடம் செயலாளர்கள் சமர்ப்பித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்தந்த துறைகளின் வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். தொழில் தொடங்க ஏதுவான சூழலை உருவாக்குவது, மக்களின் வாழ்க்கை சூழலை மேம்படுத்துவது, டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவுபடுத்துவது, மத்திய அரசின் திட்டங்கள் கடைநிலை மக்களுக்கும் சென்றடைவது, பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த லட்சியத்தை எட்ட மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்களும் கடினமாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார். அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உலக நாடுகள் பெரும் சவால்களை சந்தித்தன. இந்த பிரச்சினையை இந்தியா திறம்பட கையாண்டது. மேற்காசிய போரால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விரைவாக மீண்டெழுவது குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்தாலோசித்தார்.
மத்திய அமைச்சரவை மாற்றம் ?: மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்றும் தற்போதைய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பிரதமரின் முதன்மை செயலாளர்களில் ஒருவரான சக்தி காந்த தாஸ் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும்.
ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா, மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த், பாஜக மூத்த தலைவர்கள் தருண் சக், வி.டி.சர்மா, அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் அமைச்சரவையில் சேர்க்கப் படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.