பெங்களூரு: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் தேவனூரு மகாதேவா, நடிகர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ராதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் அபிஜித் திப்கே பேசும்போது, “தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஐஆர் மூலம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்களை நீக்கியுள்ளார். உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை எல்லாம் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். அவரது மோசடியின் காரணமாகவே பாஜக கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது.
இந்த மோசடியால் பாஜகவை எதிர்த்த மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் தோல்வி அடைந்தனர். வாக்கு திருட்டின் மூலமாகவே மோடி மீண்டும் பிரதமராகி இருக்கிறார். எஸ்ஐஆர் மூலம் ஜனநாயகத்தை அவர் கொலை செய்து விட்டார். இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து தேசத்தையும் ஜனநாயகத்தையும் மோடியிடம் இருந்து மீட்டெடுப்போம்” என்றார்.