புதுடெல்லி: பசுக்கள், மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை பிரதமர் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு தினமும் அதிகாலையில் பிரதமர் நரேந்திர மோடி நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது அவர் பசுக்கள், மயில்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
பிரதமரின் இல்லத்தில் பராமரிக்கப்படும் ஆந்திராவின் பாரம்பரியமிக்க புங்கனூர் பசுக்கள் மற்றும் மயில்களுக்கு சுதந்திர தினத்தன்றும் அவர் உணவு அளித்தார். இந்த வீடியோவை அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
“காலைப் பொழுதில் எனது நண்பர்களுக்கு (பசுக்கள், மயில்கள்) உணவு அளிப்பது அன்றாட வழக்கம். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவுக்காக செங்கோட்டையில் தேசிய கொடியேற்ற நான் முன்கூட்டியே புறப்பட்டேன். இதை எப்படியோ உணர்ந்து கொண்ட எனது நண்பர்கள் என்னை சூழ்ந்து கொண்டன. எப்போதும்போல இதுவும் ஒரு சிறப்பான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.