புதுடெல்லி: உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி நகரில் வரும் டிசம்பர் 14, 15-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஜி20 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அங்கு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பயணிகள், சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, எரிசக்தி விநியோக சங்கிலியை உறுதி செய்வது குறித்தும் வலியுறுத்தினார்.
கடந்த செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போதும் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்துப் பேசினர். அப்போதும் உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண்பது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதம் நான் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றேன். அப்போதும் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன்.
எந்தவொரு பிரச்சினைக்கும் ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சுமுக தீர்வு காண முடியும். ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடைபெறுகின்றன.
இந்த போர்களை ஜி20 கூட்டமைப்பு தடுத்து நிறுத்த வேண்டும். கருங்கடல் பகுதியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் உணவு, எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.