புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது, அதோடு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரும் தொடங்கி உள்ளது.
பருவமழையும், மழைக்கால கூட்டத் தொடரும் பயனுள்ளதாக அமைந்தால் நமது நாடு செழித்தோங்கும். இந்த ஆண்டு பருவமழையோடு, மழைக்காலக் கூட்டத்தொடரும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமுகமாக நடைபெறும் என்று உறுதியாக நம்புகிறேன். கடந்த மாதத்தில் நமது நாடு பல்வேறு மைல்கற்களை எட்டியது. அண்மையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார்.
சில நாடுகளில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் சாதனை படைத்து வருகின்றன. இந்த வரிசையில் கடந்த 18-ம் தேதி இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்கைரூட், விக்ரம் - 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தி உள்ளது.
இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் பணியாற்றும் குழுவினரின் சராசரி வயது 28 ஆண்டாக உள்ளது. நான் 56 வயது இளைஞரை (ராகுல் காந்தி) பற்றிப் பேசவில்லை. வெறும் 28 வயது சராசரியை கொண்ட ஒரு குழுவைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
இந்திய விண்வெளித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் நிறுவனங்களுக்கான கதவு திறக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாகவே விண்வெளித் துறையில் ஸ்கைரூட் ஸ்டார்ட்-அப் நிறுவனம் அசாதாரண சாதனையை படைத்திருக்கிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து இளைஞர்களையும் மனதார பாராட்டுகிறேன்.
ராஜஸ்தானில் அண்மையில் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, நாட்டின் 3-வது செமி கண்டக்டர் ஆலை திறக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த, மிகவும் நீளமான ஹைட்ரஜன் ரயில் ஆகும்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் வேளையில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வேகம் பெற்றிருக்கிறது, லட்சியங்கள், இலக்குகளை அடைய நேர்மறையான மனப்பான்மை அவசியம். நாடாளுமன்றத்தில் அனுபவமிக்க எம்பிக்கள் உள்ளனர், அவர்களின் அறிவும் ஞானமும் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட வேண்டும், அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும், கூட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதுவே இளைஞர்களின் விருப்பமும் ஆகும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அனைத்து எம்பிக்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.