புதுடெல்லி: வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 47 பேர் இறந்ததாகவும் 23 பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘டிட்வா புயலால் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அனைத்து குடும்பங்களும் பாதிப்பில் இருந்து விரைந்து மீண்டு வரவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.
நமது நெருங்கிய அண்டை நாடான இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை இந்தியா விரைந்து அனுப்பியுள்ளது. கூடுதல் உதவிகளை செய்யவும் தயாராக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஐஎன்எஸ் விக்ராந்த் உதவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.