புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து வரும் நிலையில், ‘தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விரைந்து விசாரிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதன்மூலம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (‘காக்ரோச் ஜனதா பார்ட்டி - சிஜேபி) டெல்லி ஜந்தர்
மந்தரில் கடந்த ஜூன் 28-ம் தேதி போராட்டத்தை தொடங்கியது. இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு 21 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்தார். உடல்நலம் குன்றியதால், அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதன்பிறகு, சிஜேபி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி கடந்த 20-ம் தேதி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதேபோல, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று தெரிவித்துள்ளதாவது: நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. இதற்கு அரசு முதல் முன்னுரிமை அளிக்கிறது. வினாத்தாள் கசிவில் தொடர்பு உடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்காக விரைவு (‘ஃபாஸ்ட் டிராக்) நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகள், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை. நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் யாரும் தப்ப முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எனினும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையே சிஜேபி கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது: நீட் மறுதேர்வும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் முழுமையாக கைது செய்யப்படவில்லை. இந்த சூழலில், விரைவு நீதிமன்றம் அமைப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது நகைப்புக்குரியது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுவரை வாய்திறக்கவில்லை.
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரி வருகிறோம். ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படுவது இல்லை. நாடாளுமன்றத்தை மதித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் பிரதமர் மோடி முன்வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.