புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று காலத்தில் (2020-ல்) பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின் மொத்த இருப்பு, 2024-25-ம் நிதியாண்டின் முடிவில் ரூ.8,452 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த தகவல் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இடம்பெற்றுஉள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மொத்த நிதியில் 93% வங்கியில் நிலையான வைப்பு நிதியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2024-25-ம் ஆண்டில் கிடைத்த வட்டி வருவாயும் (ரூ.475 கோடி), அந்த நிதியாண்டில் பெறப்பட்ட மொத்த நன்கொடைக்கு நிகராக உள்ளது.
2025 மார்ச் 31 நிலவரப்படி ‘பி.எம். கேர்ஸ்’ கணக்கில் ரூ.8,452 கோடி இருப்பு உள்ளது. இதில், ரூ.7,846.65 கோடி (93%) நிலையான வைப்பு நிதியிலும் (எப்டி), மீதமுள்ள தொகை அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் ரொக்கக் கணக்கிலும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த முழு நிதியாண்டிலும் ‘பி.எம். கேர்ஸ்’ அமைப்பானது வெறும் ரூ.87.85 லட்சத்தை மட்டுமே செலவிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டு நிறைவடைந்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், 2026 ஆகஸ்ட் முதல் வாரத்தில் தணிக்கை செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்ட இந்தத் தணிக்கை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அவசரநிலைகள் மற்றும் இயற்கை அல்லது மனிதனால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது, சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது, ஆராய்ச்சிகளுக்கு நிதியளிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற நோக்கங்களுக்காக பொது தொண்டு அறக்கட்டளையாக அமைக்கப்பட்டதுதான் ‘பி.எம். கேர்ஸ்’ நிதியம்.