நந்தன் நிலேகனி

 
இந்தியா

நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் குழு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று இரவு வெளியிட்ட செல்ஃபி வீடியோவில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழலில், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. நமது தேர்வு நடைமுறைகள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். அனைத்து தேர்வு நடைமுறைகளிலும் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு, உலக அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை அமல்படுத்துவது குறித்து இக்குழு ஆய்வு செய்யும். குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நிலேகனி குழுவில் சோம்நாத், காமகோடி இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி (71), ஆதார் ஆணையத்தின் முதல் தலைவராகப் பணியாற்றியவர். அவரது வழிகாட்டுதலின் படியே தற்போது குடிமக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இ-கேஒய்சி மற்றும் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கும் நந்தன் நிலேகனி மிக முக்கிய பங்களிப்பை வழங்கி உள்ளார்.

அவரது தலைமையிலான உயர்நிலைக் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், இந்திய உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, கல்வித் துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அம்ரித் லால் மீனா உள்ளிட்டோர் இடம்பெற உள்ளனர்.

SCROLL FOR NEXT