புதுடெல்லி: ராணுவம், கடற்படை, விமானப்படையில் 50 சதவீதம் முதல் 75 சதவீத அக்னி வீரர்களை நிரந்தர பணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் 3 ஆண்டுகளுக்கு குறைவான அனுபவம் கொண்ட இந்திய ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர்.
கார்கில் போருக்குப் பிறகு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரமணியம், லெப்டினென்ட் ஜெனரல் கே.கே.ஹசாரி, பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் வர்கீஸ், சதீஷ் சந்திரா, பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் 2022-ல் ‘அக்னி பாதை’ திட்டம் தொடங்கப்பட்டது.
இதன்படி ராணுவம், கடற்படை, விமானப் படையில் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும் சேர்க்கப்பட்டனர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியில் நீடிப்பார்கள். பணித் திறனின் அடிப்படையில் அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் நிரந்தர பணியில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ‘அக்னி பாதை’ திட்டத்தில் பணியாற்றும் பெரும்பாலான வீரர்களை நிரந்தரப் பணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தற்போதைய நடைமுறைகளின்படி 25 சதவீத அக்னி வீரர்களை மட்டுமே நிரந்தரப் பணியில் சேர்க்க முடியும். இந்த நடைமுறையை மாற்றி 50 சதவீதம் முதல் 75 சதவீத அக்னி வீரர்களை நிரந்தரப் பணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முப்படைகளும் அளித்த பரிந்துரைகளை பாதுகாப்புத் துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் வீரர்களுக்கு ரூ.11.71 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அவர்களுக்கு ஓய்வூதியம் மட்டும் கிடைக்காது. பணிக்காலத்தில் அவர்களுக்கு ரூ.48 லட்சத்துக்கான காப்பீடு வசதி, இதர அனைத்து சலுகைகளும் அளிக்கப்படுகிறது.
மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் பாதுகாப்பு படைகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் காவல் துறைகளில் அக்னி வீரர்கள் சேருவதற்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.