புதுடெல்லி: எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20 பெட்ரோல்) விற்பனையை எதிர்த்து வரும் ஆக.4-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
நாடு முழுவதும் 20% எத்தனால் கலக்கப்பட்ட (இ20) பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து டெல்லி டாக்சி மற்றும் சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தலைவர் சஞ்சய் சாம்ராட் கூறியதாவது:
“எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை எதிர்த்தும், அதனை திரும்பப் பெற கோரியும் நாடாளுமன்றம் நோக்கி ஆக.4-ல் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் நித்திரையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விழிக்க செய்யவுள்ளோம். எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக தேசம் முழுவதும் வாகனங்கள் பழுதடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. எங்களது பேரணி போராட்டத்துக்கும் இ20 ஜனதா கட்சி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அல்லது வேறு எந்தவொரு அமைப்புக்கும் தொடர்பு இல்லை” என்றார்.
இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத்தின் தேசிய தலைவர் ஹரிஷ் சபர்வால் கூறியதாவது: “வாகன பயன்பாட்டாளர்களிடம் இ20 பெட்ரோல் பயன்பாடு திணிக்கப்படக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் அது வழங்கப்பட வேண்டும். இப்போது அது மாதிரியான விருப்ப தேர்வு எதுவும் இல்லை. இந்த விவகாரம் சார்ந்து நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ள உள்ள பேரணியை நாங்கள் ஆதரிக்கிறோம். இப்போதைக்கு தேசிய அளவிலான வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை” என்றார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மேற்கொண்ட போராட்டத்துக்கு வெற்றி கிடைத்த நிலையில் சமூக வலைதளத்தில் இ20 ஜனதா கட்சி உதயமானது. இதற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை சார்ந்த அரசின் கொள்கை முடிவு சர்ச்சையை எழுப்பி உள்ளது. வாகனத்தின் மைலேஜ், எந்திர கோளாறு உள்ளிட்ட கேள்விகள் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் இ20 பெட்ரோல் பாதுகாப்பானது, சுத்தமானது மற்றும் வேளாண் மக்கள் இதன் மூலம் ஆதாயம் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
இ20 பெட்ரோல்
பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக அதைப் பயன்படுத்துவதே இ20 என்று அழைக்கப்படுகிறது.
மாசு குறைவு, எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும், அதோடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் வலுவடையும் என தகவல்.
பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை கடந்த 2022 நவம்பரில் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை வரும் 2030-ல் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.