புதுடெல்லி: குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான கொள்கையை 3 மாதங்களுக்குள் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குணப்படுத்த முடியாத நோய்களால் அவதிப்படும் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த கைதிகளை கருணை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து நாடு தழுவிய வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அனைத்து மாநில அரசுகளுக்கும் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து, தகுதியான கைதிகளை அடையாளம் காணும் ஒருங்கிணைந்த கொள்கையை வகுத்து 3 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“குணப்படுத்த முடியாத தீராத நோய்” என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள கையேட்டின் அடிப்படையில் தெளிவான, சீரான வரையறையை உருவாக்க வேண்டும். கைதிகளின் உடல்நிலையை பாரபட்சமின்றி துல்லியமாக ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான சுதந்திரமான மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும்.
காலக்கெடு...
விடுதலை செய்யக் கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ‘இ-பிரிசன்ஸ்' இணையதள போர்ட்டலுடன் அனைத்து விவரங்களையும் இணைக்க வேண்டும், குறிப்பாக, விண்ணப்பம் சமர்ப்பிப்பது முதல் மருத்துவக் குழுவின் பரிந்துரை மற்றும் இறுதி முடிவு வரை அனைத்தும் போர்ட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கான டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.