முதல்வர் சிவகுமாருடன் ஹரி பிரசாத் 

 
இந்தியா

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பி.கே.ஹரிபிரசாத் நியமனம்: சித்தராமையாவுக்கு செயற்குழுவில் இடம்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே.சிவகுமார் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த பொறுப்புக்கு பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே.சிவகுமார் நேற்று முன் தினம் அம்மாநில முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து அவர் மாநில தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று விடுத்த அறிவிப்பில், ''காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பி.கே.ஹரிபிரசாத்தை கர்நாடக மாநில தலைவராக நியமித்தார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது'' என தெரிவித்தார்.

ஒபிசி பிரிவை சேர்ந்த பி.கே.ஹரிபிரசாத் (71) கல்லூரி மாணவ பருவத்தில் இருந்து காங்கிரஸில் உள்ளார். 4 முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்துள்ள அவர், காங்கிரஸில் ஒபிசி பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பி வந்தார். இதனால் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஒபிசி பிரிவை சேர்ந்த அவரை தலைவராக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அவருக்கு முன்பு, 2003ல் ஜனார்த்தன பூஜாரி அந்த பொறுப்பை வகித்தது குறிப்பிடத்தக்கது.

சித்தராமையாவுக்கு செயற்குழு

கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா கடந்த 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவர் வருத்தம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையாவை செயற்குழு உறுப்பினராக நியமித்து, அறிவிப்பு வெளியிட்டார்.

SCROLL FOR NEXT