புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி வழியாக கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்வு முறைகேடுகளைத் தடுக்க கடந்த மாதம் நடைபெற்ற நீட் மறுதேர்வின்போது இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்தது.
இந்நிலையில் டெலிகிராம் மூலமாக திரைப்படங்கள், ஒடிடி தொடர்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன. இந்த ஆன்லைன் திருட்டு தொடர்பாக 3,000-க்கும் மேற்பட்ட டெலிகிராம் சேனல்கள் மீது மத்திய அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெலிகிராம் நிறுவனத்துக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
அதில் கூறியிருப்பதாவது: பதிப்புரிமை பெற்ற திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் டெலிகிராமில் பகிரப்படுவதாக அதன் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர். இவற்றை ஆய்வு செய்து, திருட்டு தனமாகத் திரைப்படங்களையும், ஓடிடி தொடர்களையும் வெளியிடும் 3,142 டெலிகிராம் சேனல்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
விதிமீறல்களில் ஈடுபடும் சேனல்கள், குரூப்கள், கணக்குகள், அட்மின்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு எதிராக டெலிகிராம் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.