கண்ணூர்: கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து மாநில முதல்வர் பினராயி விஜயன் (80) கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் நேற்று வாகன பேரணி மூலம் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தலச்சேரியில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் அவர் நேற்று காலை 11 மணியளவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், தனக்கு ரூ.45 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.56 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் 7-வது முறையாக போட்டியிடும் முதல்வர் பினராயி விஜயன், தர்மடம் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார்.
இங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் அப்துல் ரசீத்தும், பாஜக சார்பில் ரஞ்சித் என்பவரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜக.வின் 2-வது பட்டியல் கேரளா சட்டப்பேரவை தேர்தலில் 47 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக ஏற்கெனவே வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் 39 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. பாஜக முன்னாள் மாநில தலைவரும், மிசோரம் மாநில முன்னாள் ஆளுநருமான கும்மனம் ராஜசேகரன் அரண்முலா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.