மும்பை: மோசமான வானிலையால் விமானி செய்த தவறான கணிப்பு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி அருகே நேற்று முன்தினம் காலையில் தரையிறங்க முயன்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் (67) உட்பட, அந்த விமானத்தில் பயணம் செய்த பைலட் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) சிறப்புக் குழுவினர், விபத்து நடந்த பகுதியை நேற்று முன்தினம் மாலை பார்வையிட்டனர்.
இதனிடையே, மோசமான வானிலை மற்றும் போதிய பார்வைத்திறன் இல்லாத சூழலில், தரையிறங்கும்போது விமானி செய்த தவறான கணிப்பு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
பாராமதி போன்ற கட்டுப்பாடற்ற விமான நிலையங்களில், நிலையான பார்வைத்திறன் விமான விதிகளின்படி (VFR) 5 கி.மீ. தூரப் பார்வைத் திறன் அவசியம் தேவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், பார்வைத் திறன் 3 கி.மீ. ஆக இருக்கும்போது, விமானி சிறப்பு VFR-ஐப் பயன்படுத்த முடியும். இந்த விபத்தின்போது அத்தகைய சூழலே நிலவியது.
சரியாக என்ன நடந்தது என்பதையும், எந்தப் புள்ளியில் இந்த விபத்து நிகழ்ந்தது என்பதையும் கண்டறிய, புலனாய்வாளர்கள் இப்போது விமானத்தின் சீரமைப்பு, ஓடுதளத்திலிருந்து விமானத்தின் தொலைவு மற்றும் நிகழ்வுகளின் வரிசை ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், மற்ற விமான நிலையங்களைப் போலல்லாமல், கிளாஸ் ஜி (Class G) வகையைச் சேர்ந்த பாராமதி விமான நிலையத்தில் வழிகாட்டு கருவிகளோ அல்லது முறையான முழுநேர விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்போ இல்லை.
இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “விமானி ஓடுதளத்தைக் கண்ணால் பார்த்த பிறகு, ஒரு தவறான முடிவை எடுத்திருக்கலாம். மேலும் விமானப் பாதையை மாற்ற கடுமையான திருத்தங்களைச் செய்ய முயன்றிருக்கலாம். இது விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்க வழிவகுத்திருக்கலாம். இந்தத் துயரத்தின் துல்லியமான காரணங்களைக் கண்டறிய தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தன.
கருப்பு பெட்டி மீட்பு: செய்த லியர்ஜெட் 45 விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமான விபத்து புலனாய்வு அலுவலகம் (ஏஏஐபி) விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை விரைவாக நடைபெறுவதாகவும், விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள தகவல்கள் வெளியான பின்பு, விமான விபத்துக்கான காரணம் தெரியவரும். விமான விபத்து விசாரணைக்காக டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சென்ற ஏஏஐபி அதிகாரிகள் விபத்து நடத்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.