ரோஹித்

 
இந்தியா

ஏஐ மூலம் போலி வங்கி செயலி உருவாக்கியவர் கைது

செய்திப்பிரிவு

லக்னோ: செயற்கை நுண்ணறிவு மூலம் போலி வங்கி செயலிகளை உருவாக்கிய இளைஞர் குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஹித் வீரேந்திர சிங்க்கை குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர், சைபர் கிரிமினல்களுக்கு உதவும் வகையில் போலியான வங்கி செயலிகளை உருவாக்கியுள்ளார். இதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அப்ளிகேஷன்களை பயன்படுத்தியுள்ளார். ரோஹித், கான்பூரில் 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

11-ம் வகுப்பு படிப்பையும் பாதியிலேயே விட்டுவிட்டு, பணம் சம்பாதிக்கும் ஆசையில் சைபர் கிரிமினல்களுடன் சேர்ந்துள்ளார். அவர் உருவாக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் செல்போன் செயலியானது, வங்கியின் அசல் செயலியைப் போலவே அமைந்துள்ளது.

இவர் ஜார்க்கண்டின் ஜம்தாராவிலிருந்து செயல்படும் சைபர் கிரைம் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு உதவி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஹரியானா, ராஜஸ்தானைச் சேர்ந்த கும்பல்களைச் சேர்ந்தவர்களுக்கும் உதவியுள்ளார்.

இவர் உருவாக்கிய போலி பஞ்சாப் நேஷனல் வங்கியின் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்த சூரத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் போனிலிருந்து உடனடியாக ரூ.5 லட்சம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நபர் சூரத் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து தற்போது ரோஹித்தை கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT