

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் மோசடி விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய விஷயத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரத்தில் மாணவர்கள் கடந்த திங்கள் கிழமை டெல்லியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர், போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். இதைக் கண்டித்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நமது நாட்டில், கல்வி முறை கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை.
தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளால் இளைஞர்கள் எதிர்காலத்தைத் தொலைக்கின்றனர். நீட் தேர்வு காரணமாக ஓராண்டுக்கு 1.32 லட்சம் கோடி புழங்குகிறது. வினாத்தாள் கசிவு காரணமாக மறு தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
மாணவர்களின் முக்கிய 3 கோரிக்கைகளை ஏற்றால் போராட்டம் முடிவுக்கு வரும். முதலாவதாக மத்திய கல்வி அமைச்சராக தோல்வி அடைந்தவரும், ஊழல்வாதி என அறியப்பட்டவருமான தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இரண்டாவதாக மாணவர்கள் மீது கை நீட்டிய ஒவ்வொரு நபரும் (போலீஸார்) பொறுப்பேற்க வைக்கப்பட வேண்டும். 3-வதாக இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியவர் (பிரதமர் மோடி), மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், நமது நாட்டின் மிகப்பெரிய சொத்து என்று நினைக்கப்படும் கல்வி முறையானது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் காலத்தில் முற்றிலும் சிதைந்துவிட்டது. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் நமது கல்வி முறையை மாற்ற வேண்டும். மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவத்துக்கு அவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரியங்கா வேதனை:
நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவரையோ அல்லது பிற கட்சித் தலைவர்களையோ பேச விடுவதில்லை. விவாதம் நடத்துவது குறித்து அரசிடம் கேட்டுச் சொல்வதாக மக்களவைத் தலைவர் கூறுகிறார். இது என்ன நடைமுறை? நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது.
நாட்டின் இளைஞர்களுக்கான முழு கல்வி பட்ஜெட் ரூ.1.4 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், அதானி, அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன்களை அரசு தள்ளுபடி செய்கிறது. விவசாயிகள், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கட்டமைக்கக் கடுமையாகப் போராடுகிறார்கள்; ஆனால், அவர்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.