இந்தியா

“கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர்” - ராகுல் காந்தி

மோகன் கணபதி

புதுடெல்லி: கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டதாகவும், அமைய இருக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து மாநிலத்துக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் செய்யப் போவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 4-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 23-ம் தேதியடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ளது. மனுக்களைத் திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாநில தேர்தல்களில் கேரளாவில்தான் முதலாவதாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி உள்ளது. அதேநேரத்தில், பாஜக தலைமையிலான என்டிஏவும் பல இடங்களில் கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

          

இந்நிலையில், கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘யுடிஎப் அணி என்பதே கேரள அணியாகும். ஒவ்வொரு வேட்பாளரும் கேரள மக்களின் குரலையும், அவர்களின் லட்சியங்களையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றனர். இது அனுபவம் வாய்ந்த தலைவர்களையும், மாற்றத்தை முன்னெடுக்கும் இளைஞர்களையும் கொண்ட ஒரு அணியாகும். தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளின் நுணுக்கங்களை நன்கு உணர்ந்த ஆண்களையும் பெண்களையும் கொண்ட ஒரு வலிமையான அணியாக இது உள்ளது.

என்னைப் பொறுத்தவரை கேரளம் என்பது எனது இல்லம்; கேரள மக்கள் எனது குடும்பத்தினர். அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்த அனைத்துக்காகவும் அவர்கள் என் மீது பொழிந்த அன்பு மற்றும் அரவணைப்புக்காகவும் நான் அவர்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். நான் எப்போதும் அவர்களுக்கு துணையாகவே இருப்பேன்.

கேரளத்தில் இருந்து வரும் செய்தி மிகத் தெளிவானது. மக்கள் ஒரு மாற்றத்துக்கு தயாராக உள்ளனர். மக்களின் குரலுக்குச் செவி சாய்த்து, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, நேர்மையுடன் அவற்றை நிறைவேற்றித் தரும் ஒரு அரசாங்கத்தையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமைய இருக்கும் யுடிஎப் அரசாங்கத்துடன் இணைந்து, இந்த அழகிய மாநிலத்துக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் நான் செய்வேன். கேரளம் வெல்லும்; யுடிஎப் முன்னின்று வழிநடத்தும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT