இந்தியா

இந்​தி​யாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2003-ம் ஆண்​டில் ஆந்​திராவில் இந்து மத சம்​பிரதாயங்​களின்​படி ஒரு தம்​ப​தி​யினர் திரு​மணம் செய்து கொண்டனர். திரு​மணத்​துக்​குப் பிறகு இந்த தம்​பதி பிரிட்​டனில் குடியேறினர். சில ஆண்​டுகளுக்​குப் பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறு​பாடுகள் ஏற்​பட்​டன. இதைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்​டில் மனைவி மட்​டும் ஆந்​திரா​வுக்கு திரும்பினார். இதன்​பிறகு ஆந்​திர நீதி​மன்​றத்​தில் விவாகரத்து பெற கணவர் தீவிர முயற்சி செய்​தார். ஆனால் அவரது முயற்சி பலன் அளிக்​க​வில்லை.

பிரிட்​டனில் மருத்​து​வ​ராகப் பணி​யாற்​றிய கணவர் கடந்த 2013-ம் ஆண்டு பிப்​ரவரி​யில் அந்த நாட்​டின் குடியுரிமையைப் பெற்​றார். இதை அடிப்​படை​யாக வைத்து பிரிட்​டிஷ் நீதி​மன்​றத்​தில் அவர் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்​றார். இதன்​பிறகு பிரிட்டனில் அவர் 2-வது திரு​மணம் செய்து கொண்​டார்.

இந்த விவகாரம் தொடர்​பாக முதல் மனைவி சார்​பில் ஆந்​திர போலீ​ஸில் புகார் அளிக்​கப்​பட்​டது. இதன்​பேரில் கணவர், அவரது பெற்​றோர் மற்​றும் 2-வது மனைவி மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி கணவர் தரப்​பில் ஆந்​திர உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

இதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப்​பட்​ட வழக்கை நீதிப​தி​கள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்​திர சேகர் அமர்வு விசா​ரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் கூறி​யிருப்​ப​தாவது:

இந்​தி​யாவில் திரு​மணம் செய்து கொண்ட தம்​ப​தி​கள் வெளி​நாட்டு நீதி​மன்​றங்​களில் விவாகரத்து பெற முடி​யாது. ஒரு​வேளை வெளி​நாட்​டில் விவாகரத்து பெற்​றாலும் இந்​திய சட்​டப்​படி முதல் திரு​மணம் ரத்து செய்​யப்​பட்​ட​தாக கருதப்​படாது. வெளி​நாட்​டில் விவகாரத்து பெற்று 2-வது திரு​மணம் செய்து கொண்​டால் இந்​திய சட்​டப்​படி குற்​றமாகவே கருதப்​படும். அவர்​கள் வெளி​நாட்டு குடியுரிமையை பெற்​றிருந்​தா​லும், இந்​திய சட்​டப்​படி அவர்​கள் மீது நட​வடிக்கை எடுக்க முடியும்.

தற்​போதைய வழக்​கில் கணவருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மட்​டும் தொடரலாம். அவரது பெற்​றோர், 2-வது மனைவி மீதான குற்​றவியல் நட​வடிக்​கையும் ரத்து செய்​கிறோம். இவ்​வாறு நீதிப​தி​கள் தீர்ப்​பளித்து உள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT