புதுடெல்லி: அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அதை பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைப்பவர்கள் நீதியின் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ளும் நாள் வர இருக்கிறது. அது நரேந்திர மோடியாக இருந்தாலும், அமித் ஷாவாக இருந்தாலும், ஞானேஷ் குமாராக இருந்தாலும், சாதாரண தொண்டராக இருந்தாலும் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்.
காவல் துறையின் அத்துமீறல்களையும் சட்டவிரோத கைதையும் எதிர்கொண்ட மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் அது தொடர்பான ஆதாராங்களை, காணொளிகள் அல்லது புகைப்படங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவை மிகவும் அவசியமானவையாக இருக்கும்.
அமைதியான முறையில் போராடுவது நமது உரிமை. அதை பறிக்க யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு டெல்லியில் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினரால் தாக்கப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் முதல், சாதாரண காவலர் வரை அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.
இந்த போராட்டம் என்பது தனி நபர்களின் போராட்டம் அல்ல. இது இந்தியாவின் குரல். இந்த குரலை ஒடுக்க முடியாது.” என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அக்டோபர் 10 போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.