“பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது முதிர்ச்சியின்மை” - வங்கதேச பிரதமருக்கு ஷேக் ஹசீனா கண்டனம்

“பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது முதிர்ச்சியின்மை” - வங்கதேச பிரதமருக்கு ஷேக் ஹசீனா கண்டனம்
Updated on: 
2 min read

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் வங்கதேசம் பங்கேற்காதது முதிர்ச்சியற்ற செயல் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விமர்சித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஆகஸ்ட் 2024-ல் தனது அரசுக்கு எதிரான பெரும் போராட்டங்களை அடுத்து, வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 78 வயதான ஷேக் ஹசீனா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர், “கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், வங்கதேசத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், இதில் வங்கதேசம் பங்கேற்கவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. எனது பார்வையில் இது ஒரு முதிர்ச்சியற்ற முடிவு. இது தேசிய நலனுக்கு பயனளிக்காத ஒன்று.

பிரிக்ஸ் என்பது வெறும் தூதரக ரீதியிலான சந்திப்பு மட்டுமல்ல. இது வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதோடு, வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

இதில் பங்கேற்றிருந்தால், வங்கதேசம் மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றிருக்க முடியும். மேலும், தனது சொந்த பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி இருக்க முடியும். இந்த வாய்ப்புகளை வங்கதேசம் நழுவவிட்டது.

இந்தியா, வங்கதேசத்துக்கு மிகவும் நெருங்கிய அண்டை நாடு. அதோடு, வரலாற்று ரீதியாக முக்கிய கூட்டாளி. மேலும், பிரிக்ஸ் அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பது என்பது சர்வதேச சமூகத்தில் வங்கதேசத்தின் இடத்தைப் பெற்றியதும்கூட.

பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காததற்கு நான் டெல்லியில் இருப்பதுதான் காரணம் என கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் ஒரு தனிநபர் சார்ந்த அரசியல் உணர்வுகளால் தீர்மானிக்கப்படக் கூடாது.

வங்கதேசத்துக்கு முதிர்ச்சியான, சமச்சீரான, தன்னம்பிக்கை கொண்ட வெளியுறவுக் கொள்கை தேவை. ஒரு பொறுப்புள்ள அரசு நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை திறந்து வைக்க வேண்டுமே தவிர, அவற்றை அடைக்கக் கூடாது.

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. வங்கதேசம் ஒரு கடுமையான தேசிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு நீதித்துறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊடகச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பலவீனமடைந்துள்ளது. சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொள்கின்றனர். தீவிரவாத சக்திகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது அவாமி லீக் சார்ந்த ஒரு பிரச்சினை அல்ல. இது ஒரு தேசிய நெருக்கடி. நாட்டின் மிகப்பெரிய அரசியல் சக்திகளில் ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஜனநாயகம், வாக்குரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்கும் வகையில் எனது வங்கதேச வருகை அமையும். வங்கதேச மக்களின் பக்கம் நின்று, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி, எனது நாட்டில் ஜனநாயகம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மீட்டெடுக்க உதவ விரும்புகிறேன்” என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

“பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது முதிர்ச்சியின்மை” - வங்கதேச பிரதமருக்கு ஷேக் ஹசீனா கண்டனம்
ஜெர்மனியிலிருந்து டெல்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in