புதுடெல்லி: பாஸ்போர்ட் கட்டணங்கள் ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண திட்டத்தின் கீழ், புதிய 36 பக்க பாஸ்போர்ட் அல்லது அதை மீண்டும் பெறுவதற்கான கட்டணம் தற்போதுள்ள ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயரும். அதே நேரத்தில், தத்கல் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் சாதாரண பிரிவின் கீழ் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தத்கல் பிரிவின் கீழ் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக மாற்று 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண திட்டத்தின் கீழ் ரூ.5,000 மற்றும் தத்கல் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும்.
அதே நேரத்தில் 60 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்கு முறையே ரூ.6,000 மற்றும் ரூ.8,500 கட்டணம் ஆகும். 18 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு புதிய அல்லது மீண்டும் வழங்கப்படும் 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண திட்டத்தின் கீழ் ரூ.1,750, தத்கல் திட்டத்தின் கீழ் ரூ.4,250 கட்டணம் ஆகும்.