இந்தியா

நாடாளுமன்ற விதிகள் பொதுவானது: சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதையடுத்து, மக்களவை நடவடிக்கைகளுக்கு ஓம் பிர்லா நேற்று தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற விதிகள் பிரதமர் உட்பட அனைவருக்கும் பொதுவானவை. எனவேதான், என்னை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்த நாள் முதல் நான் அவை நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தேன்.

பிரதமராக இருந்தால் கூட, அவையில் பேசுவதற்கு முன்பு சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். அவையின் கண்ணியத்தை அனைத்துத் தரப்பினரும் காக்க வேண்டும். அவையை நடத்த பயன்படுத்தும் விதிகள் பாரம்பரியமாகப் பின்பற்றப்படுபவைதான். எனது கடமைகளை எப்போதும் நடுநிலையான, நேர்மையான முறையில் நிறைவேற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT