முன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களவையில் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்திய காட்சி
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அவை பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவை வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவையின் முன்னாள் சபாநாயகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீலின் மறைவு குறித்த முக்கிய அறிவிப்பை அவையில் வெளியிட்டு சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார். அப்போது அவர், “முன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைந்துவிட்டார் என்பதை இந்த அவைக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மகாராஷ்ட்ராவின் லட்டூர் மக்களவை தொகுதியில் இருந்து 7 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். 1990 முதல் 91 வரை மக்களவை துணை சபாநாயகராகவும், 1991 முதல் 96 வரை மக்களவை சபாநாயகராகவும் திறம்பட பணியாற்றியவர். மக்களவையை அவர் சிறப்பாக வழிநடத்தினார். அவையில் கண்ணியம் காக்கப்பட அவர் பாடுபட்டார். நாடாளுமன்ற நிலைக்குழுக்களை அமைப்பது முதல் பல்வேறு முக்கிய பணிகளை அவர் சிறப்பாக மேற்கொண்டார்.
2004 முதல் 07 வரை மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்துள்ளார். நாட்டின் உள்துறை அமைச்சராக, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் ஆளுநராக, சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக அவர் இருந்திருக்கிறார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில துணை சபாநாயகராகவும் சபாநாயகராகவும் அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அவரது மறைவுக்கு இந்த அவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.
கடந்த 2001, டிச. 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் நினைவு நாள் நாளை வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த அவை அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
முன்னாள் சபாநாயகரின் மறைவு மற்றும் பாதுகாப்புப் படையினரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்தார். இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சிவராஜ் பாட்டீலின் மறைவை கருத்தில் கொண்டு அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
சிவராஜ் பாட்டீல் கடந்து வந்த பாதை: சிவ்ராஜ் பாட்டீல் கடந்த 1935-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி பிறந்தார். அவர் பிறந்த லட்டூரில் நகராட்சி மன்றத் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 1970களில் எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து லட்டூரில் இருந்து 7 முறை எம்பியாக தேர்வாகும் அளவுக்கு மக்கள் அபிமானத்தைப் பெற்றிருந்தார்.
1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்துள்ளார். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் அவர் தான் வகித்துவந்த உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பாட்டீல் பஞ்சாப் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். 2010 முதல் 2015-ம் ஆண்டு வரை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகப் பணியாற்றினார்.