இந்தியா

மக்களவையில் நிறைவேறியது வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா: புதிய அம்சங்கள் என்னென்ன?

மோகன் கணபதி

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா எனப்படும் பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா 2026 மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவை தடுக்க புதிய மசோதா கொண்டு வரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

அதற்கிணங்க, கடந்த 27ம் தேதி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பொதுத் தேர்வு (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா 2026-ஐ தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது நேற்றும் இன்றும் விவாதங்கள் நடைபெற்றன. நேற்றைய விவாதத்தின்போது, அமைச்சர் ஜிதேந்திர சிங், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பேசினர்.

இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார். அப்போது, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் அமித் ஷா என்றும், கல்வி அமைச்சகத்தை ஆர்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைச் சேர்க்கும் வகையில் மசோதாவின் சில பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

2024-ம் ஆண்டின் முந்தைய வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத்தில் சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன.

முன்பு ஒரு கோடியாக இருந்த அபராதம் இப்போது ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருந்த சிறைத் தண்டனை இப்போது ஐந்து முதல் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, மற்றும் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்படும்.

திட்டமிட்ட குற்ற கும்பல்களுக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை (முன்பு இது 5 ஆண்டுகளாக இருந்தது) மற்றும் ரூ.10 கோடி அபராதம் (முன்பு இது ரூ.1 கோடி) விதிக்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையடுத்து, மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT