புதுடெல்லி: ‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எங்களது அடுத்தகட்ட போராட்டம் பெரிய அளவில் இருக்கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்சியினர் (சிஜேபி) அறிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி சிஜேபி கட்சியினர், ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் - போலீஸார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் போலீஸார், துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சுதந்திர இந்தியாவில் நடந்த போராட்டங்களில் இதுதான் மிகப்பெரியது. கடந்த 20-ம் தேதி நடந்த போராட்டம் வெறும் முன்னோட்டம்தான் (டிரெய்லர்). அடுத்தகட்டமாக எங்களது போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும். மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், லட்சக் கணக்கான இளைஞர்கள் டெல்லியை நோக்கி வருவார்கள். கைது நடவடிக்கைக்கும் தயாராக இருக்கிறோம். எங்கள் போராட்டத்துக்குப் பாஜக உட்பட எந்த கட்சியினரும் ஆதரவு அளிக்கலாம்’’ என்றார்.
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 25 நாட்களாக சமூக சேவகர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். இதுதொடர்பாகப் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. அவர் தனது மவுனத்தைக் கலைக்க வேண்டும். பிரதமர் மோடியின் அரசியல் என்பது வெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவதும் தேர்தலில் வெற்றி பெறுவதும் என்றே நினைக்கிறார். மக்களுக்குப் பொறுப்புடனும் கடமையுடனும் பதிலளிப்பதும் அரசியல் கடமைகளில் ஒன்று. நீட் விவகாரத்தில் பல மாணவர்கள் உயிரிழந்த பிறகும் கூட, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உங்களுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானவராக இருக்கிறார் என்பதை நாட்டுக்குத் தெரிவியுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ரூ.1 கோடி நிவாரணம்
நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது எப்ஐஆர் பதிவு உட்பட எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க கூடாது. நீட் வினாத் தாள் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு அவரிடம் பேச வேண்டும் என்று சிஜேபி கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இந்த பதற்றமான சூழ்நிலையில், சிஜேபியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சிஆர்பிஎப்-ஐ சேர்ந்த 20 கம்பெனி துணைராணுவபடையினர் நேற்று கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிஜேபி-யினரின் போராட்டத்தையடுத்து பாதுகாப்பு கருதி நீலம், மஞ்சள் மற்றும் வயலட் வழித்தடங்களில் உள்ள 16 மெட்ரோ நிலையங்களைத் தற்காலிகமாக மூடுவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று காலை 11:30 மணிக்கு அறிவித்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற சாலை பகுதியில் நேற்றிரவு திடீரென மீண்டும் மோதல் ஏற்பட்டது. கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய டெல்லி பகுதியில் மட்டும் இணையதள சேவை நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற சாலை, ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி அருகில் உள்ள பகுதிகளில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது.
போலீஸ் மீது பெப்பர் ஸ்பிரே
டெல்லியில் கடந்த 20-ம் தேதி நடந்த போராட்டத்தில் பிரபல யூடியூபர் டாக்டர் பார்த் கோயல் (10 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைத் தன் கணக்கில் வைத்திருப்பவர்) கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென தனது கையில் இருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து போலீஸார் மீது அடித்தார். இதையடுத்து போலீஸார் பெப்பர் ஸ்பிரேவைப் பிடுங்கி அவரை இழுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து சிஜேபி ஆதரவாளர்கள், பார்த் கோயலை இழுத்துச் செல்வதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.