

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் உள்கட்டமைப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா அதற்கான பதிலடியை கொடுக்கும். ஏவுகணை, ட்ரோன் அல்லது வேறு விதமான ஆயுதங்களை கொண்டு ஈரான் ஏதேனும் ஒரு கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டால், அதற்கு இணையாக ஈரானில் உள்ள ஏதேனும் ஒரு பாலம் அல்லது மினி நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்வோம்.
அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் அல்லது அதையொட்டி உள்ள பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு மீது எங்களது குறி இருக்கும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.