இடது பக்கத்தில் பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக்

 
இந்தியா

எஸ்சிஓ மன்ற நிகழ்வில் பங்கேற்க பாக். அமைச்சர் மாலிக் இந்தியா வருகை: 3 ஆண்டுகளில் முதல்முறை

மோகன் கணபதி

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரீகங்களுக்கு இடையிலான உரையாடல் நிகழ்வில் பங்கேற்க, பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக் புதுடெல்லி வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரீகங்களுக்கு இடையிலான உரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 20 முதல் 22ம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடாக பாகிஸ்தான் இருப்பதால், அந்த நாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தானின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சரான முசாதிக் மசூத் மாலிக் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.

புதுடெல்லிக்கு வருகை தந்த அவரை, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகப் பொறுப்பாளர் சாத் வர்ரைச் வரவேற்றார். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புத் துறை மத்திய அமைச்சர் டாக்டர் முசாதிக் மசூத் மாலிக் இன்று புதுடெல்லி வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் தூதரகப் பொறுப்பாளர் சாத் வர்ரைச் வரவேற்றார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முசாதிக் மசூத் மாலிக் வருகை தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரீகங்களுக்கு இடையிலான உரையாடல் நிகழ்வில் அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக் பங்கேற்பார். இந்த மன்றத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதிதுவப்படுத்தும் அவர், நாகரீகங்களுக்கு இடையிலான உரையாடலின் முக்கியத்துவம் மற்றும் ராஜதந்திரத் துறையில் அதன் பங்கு குறித்து பாகிஸ்தானின் பார்வையை பகிர்ந்து கொள்வார்.

அமைச்சரின் உரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் ஆற்றி வரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை எடுத்துரைக்கும். இந்த மன்றத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது ஷாங்காய் உணர்வுக்கு இணங்க உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் புரிதலை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் கொண்டிருக்கும் தீவிரத்தை பிரதிபலிக்கும்.

2026-27ம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது. அதற்கேற்ப, அடுத்த உச்சிமாநாட்டுக்கு முன்னதாக அமைச்சர்கள் அளவிலான கூட்டங்கள், நிபுணர் குழு விவாதங்கள் மற்றும் பிற செயல்பாடுகளை பாகிஸ்தான் மேற்கொள்ள உள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் நாகரீகங்களுக்கு இடையிலான உரையாடல் நிகழ்வை இந்தியா முன்மொழிந்தது. கடந்த அக்டோபர் 20 அன்று தஜிகிஸ்தானின் துஷான்பேயில் நடைபெற்ற எஸ்சிஓ அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றுகையில், எஸ்சிஓ நாகரீகங்களுக்கு இடையிலான உரையாடல் நிகழ்வை இந்தியா நடத்தும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT