ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்பிடிக்க ஆக்கிரமிப்பு காஷ்மீரை (பிஓகே) சேர்ந்த இளைஞர் எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்தார். இந்திய ராணுவ வீரர்கள், அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் அருகே உள்ள பைன்காடியை சேர்ந்தவர் ஜீஷான் அகமது மிர். அவருக்கும் காஷ்மீரின் உரி அருகே உள்ள துல்வாரி கிராமத்தைச் சேர்ந்த இரும் பானுவுக்கும் இடையே சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தனது காதலியை சந்திப்பதற்காக ஜீஷான் அகமது மிர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நேற்று முன்தினம் காலை காஷ்மீரின் உரி மாவட்டம், சிலிகோட் பகுதிக்குள் நுழைந்தார். இந்திய ராணுவ வீரர்கள், அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
ராணுவ வீரர்களிடம் ஜீஷான் அகமது மிர் அளித்த வாக்கு மூலத்தில், ”எனது முன்னோர் காஷ்மீரின் துல்வாரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்த பகுதியை சேர்ந்தவர் என்பதால் இரும் பானுவுடன் சமூக வலை தளத்தில் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்ய எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தேன். நான் இந்தியாவில் வாழ விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து காஷ்மீர் போலீஸாரிடம் ஜீஷான் அகமது மிர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் காஷ்மீர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உளவு அமைப்புகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.