புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 வளரும் நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கின.
பின்னர், கடந்த 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்தன.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள், உலக வங்கி போன்ற பாரம்பரிய மேற்கத்திய நாடுகள் தலைமையிலான நிறுவனங்களைத் தவிர்த்து, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்பாட்டு வங்கி (என்டிபி) வாயிலாக கடன்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதியுதவியைப் பெற முடியும்.
இதனை மனதில் கொண்டு, நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் தவித்து வரும் நமது அண்டை நாடான பாகிஸ்தான், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய பாகிஸ்தான் கடந்த 2023-ம் ஆண்டே முறைப்படி விண்ணப்பித்தது. இதற்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், இதுவரை பாகிஸ்தானால் உறுப்பினராக முடியவில்லை.
உறுப்பினராகும் தனது முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்பாட்டு வங்கியில் 580 மில்லியன் டாலர் பங்குகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி, இந்தியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான சேர்க்கை விதிகளின்படி, இந்தியாவின் எதிர்ப்பு ஒரு தகர்க்க முடியாத தடையாக விளங்குகிறது. அந்த விதிகளின்படி, உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவு இருந்தால் மட்டுமே புதிய உறுப்பினர்களை கூட்டமைப்பில் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.