ப.சிதம்பரம் |கோப்புப் படம்

 
இந்தியா

விமான துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே இண்டிகோ பிரச்சினைக்கு காரணம்: ப.சிதம்பரம்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்திய விமான துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடிப்படை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்சினையின் அடிப்படை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு துறையில் ஒரு நிறுவனம் மட்டுமோ அல்லது இரண்டு நிறுவனங்கள் மட்டுமோ ஆதிக்கம் செலுத்துவது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குப் பொருந்தாது. இதை ராகுல் காந்தி சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் பல துறைகளில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் போக்கு இருக்கிறது. இதில், விமானத்துறையும் ஒன்று.

தாரளமயமாக்கலும் திறந்த பொருளாதாரமும் போட்டியை அடிப்படையாகக் கொண்டவை. போட்டி இல்லாவிட்டால், நாம் தற்போது காண்பது போன்ற மோசமான விளைவுகள்தான் ஏற்படும்.

இந்தியாவில் துடிப்பானதாகவும் போட்டிகள் கொண்டதாகவும் இருந்த விமானத் துறை, எவ்வாறு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப் போனது என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "பாஜக தலை​மையி​லான மத்​திய அரசு, ஏகபோக​மாக ஒரு நிறு​வனத்​தின் ஆதிக்​கத்​தில் விட்​டதன் விளைவு​தான் இது. அதனால் விமானங்​கள் ரத்​து, தாமதம் என அப்​பாவி மக்​கள் பாதிக்கப்​படு​கின்​றனர்.

அப்​பாவி மக்​கள் அதற்​கான விலையை கொடுக்​கின்​றனர். நாட்​டில் எந்த துறை​யாக இருந்​தா​லும், ஆரோக்​கிய​மான போட்டி இருக்க வேண்​டும். ஒரு நிறு​வனமே ஆதிக்​கம் செலுத்​தும் வகை​யில் இருக்க கூடாது. இதில் மேட்ச் பிக்சிங் இருக்க கூடாது" என தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT