இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர ரந்திர் ஜெஸ்வால்

 
இந்தியா

வங்கதேசத்தில் இந்துக்கள் உள்பட சிறுபான்மையினருக்கு எதிராக 2,900+ வன்முறைச் சம்பவங்கள் பதிவு: இந்தியா

மோகன் கணபதி

புதுடெல்லி: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர ரந்திர் ஜெஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டியது இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பு. அங்குள்ள நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் பகைமை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் இந்து இளைஞர் ஒருவர் சமீபத்தில் கொல்லப்பட்டதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களை வெறும் ஊடக மிகைப்படுத்தல்கள் என்றோ அல்லது அரசியல் வன்முறை என்றோ புறந்தள்ளிவிட முடியாது’’ என தெரிவித்தார்.

பிஎன்பி தலைவர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், ‘‘வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை இந்தியா ஆதரிக்கிறது. இந்த நிகழ்வை, அந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும்’’ என கூறினார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற யூதர்களுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், “பாண்டி கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான நபர்கள் குறித்த அறிக்கைகள் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் எங்கள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என கூறினார்.

அமெரிக்காவின் எச்-1பி விசா விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், “அமெரிக்க விசாவை பெறுவது தொடர்பாக எதிர்கொள்ளும் சிரமங்கள், தாமதங்கள் குறித்து இந்திய குடிமக்களிடம் இருந்து இந்திய அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன.

விசா வழங்கும் விஷயம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றாலும், இது தொடர்பான கவலைகளை இந்தியா அமெரிக்க அதிகாரிகளிடம் எழுப்பி உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க, இந்திய அரசு அமெரிக்க தரப்புடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT