வயநாடு: கேரள முதல்வராக கே.சி.வேணுகோபாலை நியமித்தால், வயநாடு அமேதியாக மாறும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் வயநாடு தொகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களாகியும் இன்னும் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்களான வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதாலா ஆகியோருடைய பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டன.
இதில் கே.சி.வேணுகோபாலை முதல்வராக நியமிக்க கட்சித் தலைமை விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்கு ரமேஷ் சென்னிதாலா மற்றும் சதீசனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, கேரள முதல்வர் பதவிக்கான போட்டியை ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற வேண்டாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்தார். ஆனால், இதை யாரும் பொருட்படுத்தவில்லை.
கே.சி.வேணுகோபாலை முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை எச்சரிக்கும் போஸ்டர்கள், பிரியங்கா காந்தியின் தொகுதியான வயநாட்டில் ஒட்டப்பட்டுள்ளன. "மிஸ்டர் ராகுல், கே.சி. (வேணுகோபால்) உங்கள் பையைத் தூக்குபவராக இருக்கலாம், ஆனால் கேரள மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று ஒரு போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. "வயநாடு அடுத்த அமேதியாக மாறக்கூடும்" என்று மற்றொரு போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதி காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்தது. இந்நிலையில், 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியைத் தோற்கடித்து பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். இதை நினைவுகூரும் வகையில்தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. உயரிய பதவி தவிர வேறு எதையும் ஏற்கப் போவதில்லை என்று சதீசன் தெளிவுபடுத்தியுள்ளார். இது கட்சித் தலைமைக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.