திருவனந்தபுரம்: கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. புதிய முதல்வராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியாக சமீபத்திய தேர்தலை கண்காணித்த ரத்தன் யு.கேல்கர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை நடத்திய அதிகாரியை நேரடியாக முதல்வர் அலுவலகத்துக்கு மாற்றுவது தேர்தல் நடுநிலைமை குறித்த மக்களின் பார்வையை சீர்குலைக்கும் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
இந்த இடமாற்றம் கேல்கரின் சேவைகளுக்கான வெகுமதி என்று மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் நம்பகத்தன்மை குறித்தும் அக்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகர்வால், மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பிற கட்சித் தலைவர்களும் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினர்.
இந்நிலையில் காங்கிரஸின் அதே வாதங்களை பயன்படுத்தியும் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியும் பாஜக விமர்சிக்கிறது. இந்நிலையில் கேல்கரின் நியமனத்தில் முறைகேடு எதுவும் இல்லை என்று முதல்வர் சதீசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தலுக்குப் பிறகு ஓய்வு பெறுவதில்லை. அவருக்கு புதிய பதவி வழங்கப்பட வேண்டும். முன்னாள் நிதியமைச்சர், முந்தைய முதல்வரின் செயலாளராக கேல்கர் பணியாற்றியுள்ளார். எனது குழுவில் ஒரு அனுபவம் வாய்ந்த அதிகாரி இடம்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.