புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டது மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்துப் பேச, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த சந்திப்பு கோரிக்கையை நிராகரித்தார்.
இதுகுறித்து சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் வாக்குக் களவாடல் குறித்துத் தலைமை நீதிபதியிடம் முறையிட அனுமதி கோரினோம். ஆனால், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதி எங்களைச் சந்திக்க விரும்பவில்லை. வாக்கு திருட்டு, தேர்தல் முறைகேடு மற்றும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதன் மூலம் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முறையிட நேரம் கேட்டால், அரசியல்வாதிகளைச் சந்திக்க மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறுகிறார். தலைமை நீதிபதியின் இந்த முடிவை நாட்டு மக்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள்.
இவ்வாறு ராவத் கூறினார். காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் பேசுகையில், “நாங்கள் திட்டமிட்டபடி போராட்டத்தை முன்னெடுப்போம். கட்சியின் தலைமை என்ன வழிகாட்டுதல் வழங்குகிறதோ, அதை அனைவரும் பின்பற்றுவார்கள்” என்றார்.
தி.மு.க முன்னாள் எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையி்ல், “தலைமை நீதிபதிக்கு என்ன மாதிரி அழுத்தம் இருக்கிறது எனத் தெரியவில்லை. நாங்கள் அளிப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மனு. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார், நடுநிலையாக இல்லை என்பதுதான் எங்கள் புகார். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டால்தான் ஜனநாயகம் தழைக்கும். ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும், அவர்களும் ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம்?” என்றார்.
தலைமை நீதிபதி விளக்கம்
சந்திப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், "சந்திப்பு கோரி ஞாயிற்றுக்கிழமை எனக்குக் கடிதம் வந்தது. எதற்காக இந்தச் சந்திப்பை ஏற்க இயலாது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு அன்றிரவே அவர்களுக்குப் பதில் அனுப்பி விட்டேன்.
நாட்டின் எந்தவொரு சாதாரணக் குடிமகனாக இருந்தாலும் சரி, மக்கள் பிரதி நிதியாக இருந்தாலும் சரி – அவர்களுக்காகச் சட்டரீதியான வழிகளில் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. அனைவரும் நீதிமன்றத்தை அணுக முழு உரிமை உண்டு. அவர்களின் முறையீடுகளை விசாரித்து, சட்டத்திற்கு உட்பட்டு வழங்க வேண்டிய நீதியை நீதிமன்றம் நிச்சயமாக வழங்கும்" என்றார்.