

மதுரை உயர் நீதிமன்றம், கோப்புப் படம்.
மதுரை: ‘அரசின் நிதிச்சுமைகளை காரணம் காட்டி அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது. அரசு ஊழியர்களின் சேவைகளை அங்கீகரிக்கும் கடமை அரசுக்கு உண்டு. அவர்களை தவிக்க விடக் கூடாது. அவர்களின் குடும்பங்களை கைவிடக் கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவர்களாக பணிபுரிந்து 2009-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் பெற்று வந்தனர். இந்நிலையில் இவர்களின் ஓய்வூதியம் தவறுதலாக கணக்கீடு செய்யப்பட்டதாக கூறி ஓய்வூதியத்தை குறைத்து கடந்தாண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி 143 ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, அரசு மருத்துவர்களின் ஓய்வூதியம் குறைப்பு அரசாணையை ரத்து செய்து 16.12.2025-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக சார்பில் 5 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.
மருத்துவர்கள் தரப்பில், ‘அரசாணை மூலம் வழங்கப்பட்ட உரிமையைத்தான் எதிர்மனுதாரர்கள் கேட்கின்றனர். அந்த உரிமை மற்றொரு அரசாணையால் மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமையை நிதிச்சுமையை காட்டி மறுப்பது சட்டவிரோதம். எதிர்மனுதாரர்கள் 2009-ல் ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் தற்போது 76 வயதை எட்டியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் இறந்துவிட்டனர்’ எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஓய்வூதியம் என்பது சொத்துரிமைக்கு இணையான ஒரு நிலைபெற்ற உரிமை. ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களின் தவறு இல்லாமல் ஓய்வூதியத்தில் கடுமையான குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள் பணியின்போது உன்னதமான கடமையைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளனர். அக்டோபர் 2009-ல் ஓய்வு பெற்றனர். தற்போதைய நிலவரப்படி இறுதியாக ஓய்வு பெற்றவருக்கு 76 வயது இருக்கும். ஓய்வு பெறும் வயது 60 ஆண்டுகள் ஆகும்.எனவே, அவர்கள் எண்ணிக்கையில் குறைந்து வரும் ஒரு பிரிவினராக உள்ளனர். அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் 50 சதவீதம் மட்டுமே குடும்ப ஓய்வூதியமாக இருக்கும். அரசாணைக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஓய்வூதியர்களுக்கான நிதிச்சுமை ரூ.300 கோடி என்பது சரியல்ல.
அது அரசால் தெரிவிக்கப்பட்ட கற்பனை எண்ணிக்கையாகும். நிர்வாக அதிகாரிகள் தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஓய்வூதியத்தை குறைக்க முடியாது. ஓய்வூதியதாரர்களின் அவலநிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது வெறும் ஓய்வூதியக் குறைப்பு பற்றிய வழக்கு அல்ல.
மருத்துவர்கள் ஆற்றிய சேவையின் மதிப்பைக் குறைப்பதால் அவர்கள் மனவேதனையடைவர். மருத்துவர்கள் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஆற்றிய சேவைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அரசின் பிற நிதிச் சுமைகளைக் காரணம் காட்டி அவை புறக்கணிக்கப்படக் கூடாது. அரசு ஊழியர் ஆற்றிய அர்ப்பணிப்புள்ள சேவைகளை அங்கீகரிக்கும் கடமை அரசுக்கு உள்ளது. அவர்களை தவிக்கவிடக்கூடாது. அவர்களின் குடும்பங்களை கைவிடக் கூடாது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியுள்ளனர். அவர்களின் உரிமை மறுப்பு மிகவும் நியாயமற்ற மற்றும் கடுமையான நடவடிக்கையாகும்.
அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை மறுப்பது அல்லது பறிப்பது என்பது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட நடைமுறை அடிப்படையில் தான் மேற்கொள்ள வேண்டும். சட்டரீதியான மதிப்பற்ற ஒரு அரசாணையின் அடிப்படையில் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்தால் பறிக்க முடியாது.
இந்த உத்தரவு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978-ன் விதி 56-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவ்விதிகளில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, அரசு மருத்துவர்களின் ஓய்வூதியம் தொடர்பாக 2025 பிப்.5-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.