புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி - ஜி ராம் - ஜி) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை கண்டித்தும், மசோதாவின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தும் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தர்ணாவை தொடங்கினர். இந்த தர்ணா நேற்று மதியம் 12 மணி வரை நீடித்தது.
இதே மசோதா தொடர்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சி களை சேர்ந்த எம்பிக்கள் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது பிரியங்கா கூறும்போது, “குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாட்களில் விபி - ஜி ராம் - ஜி மசோதாவை மத்திய அரசு திட்டமிட்டு நிறைவேற்றி உள்ளது. தேசத்தந்தை காந்தியடிகளின் பெயர் மசோதாவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
திமுக எம்பி திருச்சி சிவா கூறும்போது, “காந்தியின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் பின்புறத்துக்கு காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன” என்று குற்றம் சாட்டினார்.