பெங்களூரு: கர்நாடக அரசின் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் கீழ் மைசூரு சாண்டல் சோப்பு மீண்டும் புதுப்பொலிவுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. 108 ஆண்டுகள் பழமையான இந்த சோப்பின் புதிய விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு ரூ.6.2 கோடி ஊதியமாக வழங்கப்பட்டது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அறிமுக விழாவில் கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், நடிகை தமன்னா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எம்.பி.பாட்டீல் பேசுகையில், “மைசூரு சாண்டல் சோப்பு விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக நடிகை தமன்னாவுக்கு நன்றி. இவருக்கு உலகளவில் இருக்கும் பிரபலத்தால் வரும் 2030-ம் ஆண்டுக்குள் மைசூரு சாண்டல் சோப்பின் விற்பனையை ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கர்நாடக மாநிலத்தை சேராத நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்ததற்கு பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகளும் கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக நடிகைகள் ரம்யா, ரஷ்மிகா, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இருக்கும்போது தமன்னாவை நியமித்தது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.