திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கு வரும் 19-ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதன்படி, 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை, பக்தர்கள் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 21-ம் தேதி முதல் 23ம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.
22-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் புஷ்பயாகத்துக்கான டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவசமாக அங்கபிரதட்சண டோக்கன்களும், 11 மணிக்கு வாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்களும், இதே நாள் மதியம் 3 மணிக்கு மாற்றுத் திறனாளி பக்தர்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான டிக்கெட்களையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
24-ம் தேதி காலை 10 மணிக்கு, டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நாள் மதியம் 3 மணிக்கு திருமலை, திருப்பதி யில் தங்கும் அறைகளுக்கான டிக்கெட்களையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பிரம்மோற்சவ விழாவுக்கு அழைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 23-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி, நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நேரு, பனப்பாகா லட்சுமி, ஜானகி தேவி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திரா உள்ளிட்டோர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
அப்போது பிரம்மோற்சவ ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சந்திரபாபு நாயுடு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.